சிறிய வயதில் மாயாஜால மந்திர கதைகளில் படித்திருக்கிறோம். அப்போதெல்லாம், நமக்கும் அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் நமது உடம்பை விட்டு விட்டு பறவைகள் உடம்பில் விண்ணைத் தொட்டு உலகம் முழுவதையும் பார்ப்பதற்கு ரசிப்பதற்கு ஆசை பட்டிருக்கிறோம். சிறிது வயது வந்த பிறகு, அறிவு வளர்ந்த பிறகு, கூடு விட்டு கூடு பாயும் வித்தை என்பது தானாக கிடைப்பது அல்ல அதற்கு இறைவனின் அருள் வேண்டும். கடினமான பயிற்சிகள் மன பக்குவமும் வேண்டும் என்று அறிந்திருக்கிறோம். அப்போது கூட எதையுமே நம்பாத நாத்திகர்களின் வாதங்களால் நம்பிக்கை இழந்து ஒரு வேளை இந்த வித்தைகள் அனைத்தும் தனிப்பட்ட மனிதர்களை, விஸ்வரூபமாக காட்டும் கற்பனை என்று நினைத்து குழம்பி இருக்கிறோம். எது எப்படி இருந்தாலும் கூடு விட்டு கூடு பாயும் கலையின் மேலுள்ள ஆர்வம் எல்லா காலத்திலும் நம்மை தொடர்ந்தே வந்திருக்கிறது.
சித்தர்களின் தலைவரான திருமூலர், சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 சித்தர்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் எளிதாக கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 5000 வருடங்களுக்கு முன்னையது. இவர் எழுதிய திருமந்திரம் உலகில் ஒப்பற்ற இலக்கியமாகத் திகழ்கிறது. இது 3000 பாடல்களை உள்ளடக்கியது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.
திருக்கயிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு மிகப் பெரும் காவலாகிய நந்தி தேவரின் திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய அட்டமாச் சித்திகளும் சிறப்பாகப் பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்தில் கொண்டிருந்த நட்பினால் அவரோடு சில காலம் தங்கிச்செல்ல எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தெற்குத்திசையை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திருக்கேதாரம், விந்திய மலை, பசுபதிநாத் கோயில், திருக்காளத்தி, காசி, திருப்பருப்பதம், திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைச் சென்று வணங்கினார். காஞ்சி நகர் சென்று திருவேகம்பப் பெருமானை வணங்கிப் போற்றி, அந்நகரிலுள்ள தவமுனிவர்களுடன் கலந்து இறைநெறியில் விளங்கினார். அதன் பின்னர் திருவதிகை சென்று சேர்ந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டார். இறைவன் அற்புதத் திருக்கூத்தாடிய திருவம்பலத்தினைக் கொண்டு விளங்கும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை அடைந்தார். அங்கு தங்கியிருந்து இறைவனை வழிபட்டார். அங்கிருந்து அருள்புரியும் திருவாவடுதுறையை அடைந்தார். திருக்கோயிலை சுற்றி வந்து பசுபதியாகிய இறைவனை வழிபட்டார், அதன் பின்னர் அவ்விடத்தினை விட்டு நீங்க மனமின்றி அங்கேயே தங்கியிருந்தார்.
திருமூலர் அங்கு தங்கியிருக்கும் காட்டினுள் பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே தொன்றுதொட்டு பசுக்களை மேய்க்கும் வம்சத்தில் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் பாம்பு கடித்து இறந்தமையால் அதனைத் தாங்காத பசுக்கள் உயிர் நீங்கிய அவனது உடம்பினைச் சுற்றி வருவதும் கதறுவதுமாக இருந்தன. இதனைக் கண்ட தவ முனிவர், இந்த இடையன் உயிர் பெற்று எழுந்தால் மட்டுமே இப்பசுக்களின் துயர் நீங்கும் என எண்ணினார். தம்முடைய உடலைப் பாதுகாவலான இடத்தில் மறைத்து வைத்து விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்னும் வழியினாலே தமது உயிரை அந்த இடையனின் உடம்பில் புகுமாறு செய்தார்.
மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகள் இருக்கும் இடத்திற்கு தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. பசுக்கள் செல்லும் வழியில் தொடர்ந்து பின் சென்றார் சிவயோகியார். தனது கணவனை கண்ட ஆனந்தத்தில் மூலனின் மனைவி தனது கணவனை அணுக முயன்றபோது தவ முனிவர் அதனைத் தடுத்தார். அப்போது கவலையடைந்த மூலனின் மனைவி ‘உமது அன்புடைய மனைவியாகிய என்னை வெறுப்பது ஏன்? இதனால் எனக்கு பெருந்துன்பத்தைச் செய்து விட்டீர்’ என்று கூறிப் புலம்பி கவலையடைந்தால். இதனை மறுத்து தனது நிலையினை கூறினார் தவ முனிவர்.
அதனைக்கேட்டு சந்தேகமுற்ற மூலனின் ஊர் பெரியவர்களிடம் சென்று முறையிட்டாள். அவர்கள் திருமூலாரை விசாரிக்க தொடங்கினர். அப்போது நடந்தவற்றை அவ்வூர் பெரியவர்களிடம் கூறினார். இவ்வாறு கூறியது மட்டுமின்றி தனது உயிரினை மூலனின் உடலில் இருந்து நீக்கி அருகிலிருந்த ஆட்டின் உடலினுள் செலுத்தினார். அப்போது அவ்வோர் சாத்தனூர் மக்கள் திருமூலர் கூறியவற்றை நம்ப தொடங்கினர். இவ்வாறு தன்னிலையை கூறி விட்டு தான் மறைத்து வைத்த தனது உடனலினை தேடி சென்றார் திருமூலார். அங்கு சென்று பார்த்த போது அங்கு அவரின் உடலை காண முடியவில்லை. அங்கிருந்து தன்னிலை உணர தொடங்கிய திருமூலார் இது கடவுளின் விருப்பம் என உணர்ந்து மூலனின் உடலில் வாழ முடிவு செய்து வாழ தொடங்கினார்.
அதன் பின்னர் சாத்தனூரில் இருந்து புறப்பட்டு சென்ற திருமூலர் திருவாடுதுறையில் உள்ள கோமுத்தீஸ்வரர் கோவிலை அடைந்து பெருமானை வழிபட்டார். அதன் பின் கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ள அரச மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். ஆண்டுக்கு ஒரு முறை கண்விளித்து ஒரு பாடலை எழுதிவியிட்டு மீண்டும் தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார். இவ்வாறு 3000 ஆண்டுகளாக தனது தியானத்தினை செய்து சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் மூவாயிரம் பாடல்களாக வழங்கினார்.
கூடு விட்டு கூடு பாயும் முறையை பெற பல தவங்கள், தியானங்கள் மற்றும் அதீத கடவுள் பக்தி என்பவற்றை மேற்கொண்டு அவ்வித்தையினை திருமூலர் பெற்றுக்கொண்டதாக புராணங்கள் மற்றும் சுவடுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி இவ்வித்தையினை எல்லோராலும் கையாளவும் கற்றுக்கொள்ள முடியாமலும் காணப்பட்டது. இவ்வித்தையினை தவறான வகையில் பயன்படுத்திட முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் இவ்வுலகிற்கு பல மூலிகைகள் மருந்துகளை பரப்பிய சித்தர்களே கூடு விட்டு கூடு பாயும் வித்தையினை இவ்வுலகிற்கு பரப்புவதற்கு மறுத்தனர் மற்றும் மறைத்தனர் எனவும் புராண கதைகள் கூறுகின்றன.